அந்தியிலே செம்மலரை அள்ளிஎவர் வீசினரோ
முந்தி நிலா விரித்ததுபோல் சிவப்பு
முழுவானம் அதன் உள்ளே ஒளிப்பு–அதை
சிந்தி லெந்தன் சிந்தைபாட
வந்த எந்தன் காதலியாள்
வானிலையைப் பார்த்துமே வியப்பு!
கன்னமிடம் மாறியதோ கனிவெடித்து தூறியதோ
என்னஎது நடந்திருக்கும்
என்றவளுள் எழுகிறதுகேள்வி–ஒரு
திண்ணமிட இயலவிலை திகைப்புமிடம் மாறவிலை
அன்னவளின் ஆச்சரியம்
அடங்காது தொடர்ந்து வரும் வேள்வி!
வானமென்ன மாயமதோ
வடியடிக்கு மாறுவதோ
காணோம் சிலமணித் துளியில் செம்மை–அதைக்
காணோ மெனும் போதி லெனுள்
நானுந் தடுமாறுகிறேன் நாயகியும் தேடுகிறாளுண்மை!
வானமொரு அதிசயமே வாழுகின்ற நிரந்தரமே
காணபல காட்சிகளை
கண்ணிறைய கொண்டுவந்து கொடுக்கும்–நித்தம்
தானந்தரும் வானத்துக்கு தந்தவரம் எந்தவரம்
தம்பிரானின் அந்தவரம்
தமிழோடு சொன்னாலே இனிக்கும்!
No Comment! Be the first one.