விழிகள் சிவந்தது வழிபார்த்து
வியர்வை நடக்குது நதிபோல
மொழியும் முனங்கல் ஓசையிலே
மூச்சில் வெப்பம் கோடையென!
எங்கே காதலா நீபோனாய்
இருப்பிடம் சுற்றி சோகமயம்!
கண்ணீர் கோலம் கன்னத்தில்
கணமும் மேனி இளைப்பினிலே
உண்ணும் நினைப்பு வரவில்லை
உந்தன் நினைப்பு விடவில்லை!
எங்கே காதலா நீபோனாய்
இருப்பிடம் சுற்றி சோகமயம்!
தண்டா யிருந்த கையிரண்டும்
தாம்பாய் மாறிப் போச்சுதடா
உண்டா யிருந்த ஆசையெலாம்
உணர்ச்சி யற்று போனதடா!
எங்கே காதலாநீ போனாய்
இருப்பிடம் சுற்றி சோகமயம்!
சூட்டி மகிழும் மலரெல்லாம்
சுண்டைக் காயாய் ஆனதுவே
ஊட்ட யிருந்ததே னிதழில்
ஒட்டிக் காய்ந்து போனதுவே!
எங்கே காதலா நீபோனாய்
இருப்பிடம் சுற்றி சோகமயம்!
இரவுக் கேலி செய்கிறது
ஏக்கம் நெஞ்சில் பாய்கிறது
வரவுக் காணா பாதையிலே
வளர்ந்து புல்லும் சாய்கிறது!
எங்கே காதலா நீபோனாய
இருப்பிடம் சுற்றி சோகமயம்!
அவலச் சுவையில் ஆயிரம்பா
அள்ளித் தெளிக்குது பிரிவாழம்
சவலை மனதை அறியாமல்
சத்தியவானே ஏன் போனாய்!
எங்கே காதலா நீபோனாய்
இருப்பிடம் சுற்றி சோகமயம்
ஓசை யேது கேட்டாலும்
ஓடுது பார்வை உனைக்காண
ஈசனை வேண்டியும் பயனில்லை
இதுவரை சேர்க்கும் மனமில்லை!
எங்கே காதலா நீபோனாய்
இருப்பிடம் சுற்றி சோகமயம்!
எத்தனை யுகங்கள் ஆனாலும்
இந்த இடத்தை அகலேனே
செத்தொரு நாளில் போனாலும்
செல்லா தெந்தன் ஆவியுமே!
எங்கே காதலா நீபோனாய்
இருப்பிடம் சுற்றி சோகமயம்!
No Comment! Be the first one.